கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உள்பட 3 இருமல் மருந்துகளில் கலப்படம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசான் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கொண்ட டைஎத்திலின் கிளைகால் எனும் ரசாயனம் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருந்துள்ளது. இருமல் மருந்தில் டைஎத்திலின் கிளைகாலின் அனுமதிக்கப்பட்ட அளவு 0.1%. ஆனால், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் இது இருந்த அளவு 48%-க்கும் மேல்.
இந்த மருந்தை உட்கொண்டதன் காரணமாக மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இருமல் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுகுறித்து கேள்விப்பட்ட உலக சுகாதார அமைப்பு, குழந்தைகள் உயிரிழப்பு தொடர்புடைய இருமல் மருந்துகள் ஏதேனும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்று இந்திய அதிகாரிகளை அணுகி கேட்டிருக்கிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், "கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர் மற்றும் ரீலைஃப் ஆகிய மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளன" என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர் எனும் இருமல் மருந்து குஜராத்தைச் சேர்ந்த ரெட்நெக்ஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ரீலைஃப் இருமல் மருந்து குஜராத்தைச் சேர்ந்த ஷேப் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், இவ்விரு மருந்துகளிலும் டைஎத்திலின் கிளைக்கால் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு கலப்படம் நடந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது.
Cough Syrup | Coldrif | CDSCO | WHO |