இந்தியா

தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை: கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு

18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ. 1000 உதவித் தொகை அளிக்கவுள்ளதாக...

கிழக்கு நியூஸ்

தில்லியில், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ. 1000 உதவித் தொகை அளிக்கவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் 10-வது பட்ஜெட்டை நிதியமைச்சர் அதிஷி இன்று தாக்கல் செய்தார். "இன்று நாங்கள் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' என்ற புரட்சிகரத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கப்படும். பட்ஜெட்டில் இதற்காக ரூ. 2,714 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., நலத்துறை ஆகியவற்றின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 6,216 கோடி ஒதுக்கீடும் தாக்கல் செய்யப்பட்டது. நிதி உதவித் திட்டங்களின் மூலமாக சுமார் 9.03 லட்சம் பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை ஓய்வூதியம் பெறவுள்ளார்கள்.