சட்டப்பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா ANI
இந்தியா

புதிய சட்டப்பேரவையின் 2-ம் நாளிலேயே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்!

சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்தபடி, பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டார்கள்.

ராம் அப்பண்ணசாமி

புதிதாக அமைந்துள்ள தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2-வது நாளிலேயே ஆதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் நேற்று (பிப்.24) பதவியேற்றுக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தில்லி சட்டப்பேரவைத் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், மரபுப்படி இன்று (பிப்.25) காலை தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

அவரது உரைக்கு நடுவே எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினார்கள். தில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட்டது தொடர்பாக பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டார்கள்.

அவர்களை அமைதி காக்கும்படி பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா பலமுறை கோரிக்கை விடுத்தார். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் கோஷம் எழுப்பிய காரணத்தால், ஆதிஷி உள்ளிட்ட சுமார் 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இன்று (பிப்.25) ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா.

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்தபடி, பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டார்கள். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆதிஷி கூறியதாவது,

`பாபாசாகேப் அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றி, தனது உண்மையான நிறத்தை பாஜக வெளிப்படுத்தியுள்ளது. அம்பேத்கரின் இடத்தைப் பிரதமர் மோடியால் நிரப்ப முடியும் என்று பாஜக நினைக்கிறதா?. அம்பேத்கரின் படத்தை மீண்டும் அங்கே வைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்’ என்றார்.