ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தன் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கைலாஷ் கெலாட் எழுதிய கடிதம் பின்வருமாறு,
`எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் தில்லி மக்களுக்குப் பணியாற்றும் கௌரவத்தை எனக்கு வழங்கிய உங்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதே நேரம் ஆம் ஆத்மி கட்சி கடுமையான சவால்களை சந்தித்து வருவதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சவால்கள் கட்சிக்குள்ளேயே உருவாகியுள்ளன.
மக்களுக்கான நமது அர்ப்பணிப்பை அரசியல் லட்சியங்கள் பின்தள்ளிவிட்டன. இதனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக யமுனை நிதியை தூய்மையாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்தோம். ஆனால் அதை செயல்படுத்த எப்போதும் முயற்சி எடுத்ததில்லை. முன்பை காட்டிலும் அதிகமாக மாசடைந்துள்ளது யமுனை நதி.
மக்களின் உரிமைகளுக்காக போராடாமல், அரசியல் காரணங்களுக்காக போராடுவது வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால் தில்லி மக்களுக்கு அடிப்படை சேவைகளைக் கூட வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தில்லி அரசு பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் மோதிக்கொள்வதில் செலவிட்டால், தில்லிக்கான முன்னேற்றம் ஏற்படாது.
தில்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறேன். எனவே அதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படையில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்றார்.
மேலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தில்லி முதல்வர் ஆதிஷிக்குக் கடிதம் எழுதியுள்ளார் கைலாஷ் கெலாட்.