ANI
இந்தியா

அஹமதாபாத் விமான விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்! | Air India Crash

விமான விபத்து புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான விசாரணைக் குழு, விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

ராம் அப்பண்ணசாமி

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜுன் 12 அன்று லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய பயணி ஒருவரைத் தவிர இந்த விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர். அதுபோக பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விமானம் மோதியதில் மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற மறுநாள் (ஜூன் 12), விபத்து நடந்த கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

கருப்புப்பெட்டியின் மற்றொரு முக்கிய பாகம், ஜூன் 16 அன்று இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கருப்பு பெட்டியில் பதிவாகியிருந்த தரவுகள், விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பின் ஆயவகத்தில் கடந்த ஜூன் 25 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.

இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, இந்திய விமான விபத்துகளில் இருந்து பெறப்பட்ட கருப்புப் பெட்டிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. விமானத்தின் கருப்புப் பெட்டித் தரவை பகுப்பாய்வு செய்வதற்கான உள்கட்டமைப்பு இந்தியாவில் முன்பு இல்லை.

ஆனால், அண்மையில் தலைநகர் தில்லியில் நிறுவப்பட்டுள்ள விமான விபத்து புலனாய்வு அமைப்பின் அதிநவீன ஆய்வகத்தில், கருப்புப் பெட்டியின் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் (சிவிஆர்)’ மற்றும் `பிளைட் டேட்டா ரிக்கார்டர் (எப்டிஆர்)’ ஆகிய இரு சாதனங்களின் தரவுகளையும் தரவிறக்கம் செய்யும் தொழில்நுட்ப வசதி உள்ளது.