வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது வழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மறுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது. 1994-ல் சாஹு ஷாந்தி பிரசாத் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இவ்விருந்து, அதன்பின் சாஹு ஜெயின் குடும்பத்தினரின் பாரதிய ஞானபீடம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழில் ஞானபீடம் விருது
தமிழில் இதுவரை எழுத்தாளர் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் இருவருக்கு மட்டுமே ஞானபீடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ல் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்ட பிறகு, 24 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 14 அன்று வெளியானது.
பொதுவாக குடியரசுத் தலைவர் இந்த விருதை விருதாளர்களுக்கு வழங்குவது நடைமுறை. இந்நிலையில், வைரமுத்துவுக்கு விருது வழங்க குடியரசுத் தலைவர் மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. கண்ணன், ஞானபீட விருதுக் குழுத் தலைவருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நெறிமுறை ஆய்வு தேவை
லின்க்டு இன் சமூக ஊடகத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்த என் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் நிறுவனம் சாஹு ஜெயின் குடும்பத்தால் நிறுவப்பட்ட தனியார் அமைப்பு என்ற போதிலும், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாக அதன் நிலை இருப்பதால், அதன் புகழுக்கு ஏற்ற அளவில் நெறிமுறை ஆய்வு தேவைப்படுகிறது.
குடியரசுத் தலைவருக்கு கண்ணியக் குறைவு
மிகவும் மதிக்கப்படும் பின்னணிப் பாடகி உட்பட பல பெண்களால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு, ஒரு பெண்ணான இந்தியக் குடியரசுத் தலைவர் ஞானபீட விருதை வழங்குவது மிகப் பெரிய தீர்ப்புப் பிழையாகும். தேசத் தலைவியின் இத்தகைய செயல், ‘மீ டூ’ இயக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களால் பகிரங்கமாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவருக்கு ‘அரசு அங்கீகாரம்’ என்ற கேடயத்தைத் தவறுதலாக வழங்குகிறது. இந்த நெறிமுறை இலக்கியத்தை கௌரவிப்பதாக இல்லை. மாறாக, குடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்தைல் குறைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புறக்கணிப்பதாகவும் உள்ளது.
வைரமுத்து அடிப்படையில் கடவுள் மறுப்பாளர்
மேலும், வாக்தேவியான சரஸ்வதியின் சின்னத்தை வைரமுத்துவுக்குக் கொடுப்பது அடிப்படையில் பொருந்தாதது. கடவுள் மறுப்பாளராக அறியப்படும் அவருக்கு, இந்த விருதின் மதம் மற்றும் ஆன்மீக ரீதியிலான மதிப்பு, எந்தத் தனிப்பட்ட பெருமையையும் கொடுக்காது. வற்புறுத்தலின் பேரில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவது, அறிவின் புனித சின்னத்தைப் போலிப் பொருளாக ஆக்குகிறது.
விருது வழங்க மறுக்க வேண்டும்
இந்தக் கவலைகளைக் கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியின் நெறிமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்வுக் குழுவை வலியுறுத்துகிறேன். அதன்படி பின்வருவனவற்றை நான் முன்மொழிகிறேன்:
தனது பதவியின் புனிதத்தைப் பேணுவதற்காக குடியரசுத் தலைவர் ஞானபீடம் விருதை வழங்க மறுக்க வேண்டும்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் தேசிய தலைவர் அல்லது மதச் சின்னத்தின் ஈடுபாடு இல்லாமல், சாஹு ஜெயின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்று, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை விருதாளருக்கு வழங்க வேண்டும்.
ஞானபீட விருது என்பது நாட்டின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும். அவ்விருது பெறும் விருதாளர்களின் அறத்தின் மீதுள்ள களங்கத்தைப் புறக்கணித்தால், அவ்வாறு செய்ய முடியாது” என்று வலியுறுத்தியுள்ளார்.
A retired judge has written a letter requesting President Draupadi Murmu to refuse to confer the Jnanpith Award on Vairamuthu.