கரூரில் விஜயின் பரப்புரையைக் காண வந்த தவெக தொண்டர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளார்கள். முதல்வர் சொன்னதுபோல ஓர் அரசியல் கூட்டத்தில் இதுபோன்ற நெரிசல் ஏற்பட்டு இத்தனை பேர் பலியாவது அரிதான நிகழ்வு என்றாலும் இந்தியாவில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதானிருக்கின்றன. 2010 முதல் கடந்த 15 வருடங்களில் இந்தியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளார்கள். அச்சம்பவங்களின் தொகுப்பு:
2025 பெங்களூரு பயங்கரம்: 11 ஆர்சிபி ரசிகர்கள் பலி
கடந்த ஜூனில் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னசாமி மைதானம் அருகே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள். வெற்றிக் கொண்டாட்ட விழா ஏற்பாடுகளை நிர்வகித்த டிஎன்ஏ (DNA) நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2025 கோவா கோயிலில் 7 பேர் பலி
மே மாதம் கோவா ஷிர்கானில் லைராய் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தார்கள். 80 பேர் காயமடைந்தார்கள். உண்மைக் கண்டறியும் கமிட்டி, "இச்சம்பவத்துக்கு கோயில் கமிட்டி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, கிராம பஞ்சாயத்து மற்றும் கூட்டம் உள்ளிட்டவை இச்சம்பவத்துக்குக் காரணம்" என முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
2025 தில்லி ரயில் நிலையத்தில் உயிரிழந்த 16 பேர்
கடந்த பிப்ரவரியில் புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் மஹா கும்பமேளாவுக்குச் செல்லவிருந்தவர்கள். இதுதொடர்பாக விசாரிக்க இருவர் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
2025 கும்பமேளாவில் உயிரிழந்த 30 பேர்
ஜனவரி இறுதியில் 29, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக தடுப்புகளை உடைத்து மக்கள் முந்தியடித்ததில் 30 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
2025 திருப்பதியில் உயிரை விட்ட 6 பக்தர்கள்
இந்த ஜனவரியில் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்புக்காக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டைப் பெறுவதற்காக மக்கள் அதிகளவில் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித் துறை விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
2024 புஷ்பா 2 பயங்கரம்: உயிரிழந்த பெண்
டிசம்பர் மாதம் புஷ்பா 2 படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்கத்துக்கு வந்தார் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள். அப்போது ஏற்பட்ட கூச்ச நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் படுகாயமடைந்தார். இவ்வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு, பிணை மூலம் அல்லு அர்ஜுன் வெளியே வந்தார்.
2024 பிஹார்: 7 பேர் பலி
கடந்த ஆகஸ்டில் மத்திய பிஹாரில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் புதின ஷ்ரவன் மாதத்தின் 4-வது திங்களில் பூஜையின்போது பக்தர்கள் அதிகளவில் கூடினார். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பக்தர்கள் உயிரிழந்தார்கள்.
2024 சென்னை விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் பலி
கடந்த அக்டோபரில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் கூடி உலக சாதனை படைக்கப்பட்டது. எனினும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால், கடும் வெயில், நெரிசல் காரணமாக 240 பேர் மயக்கம் அடைந்தார்கள். 5 பேர் உயிரிழந்தார்கள்.
2024 ஹத்ராஸ்: 121 பேர் பலி
கடந்தாண்டு ஜூலையில் உத்தரப் பிரதேச ஹத்ராஸில் நடைபெற்ற மத போதகர் போலே பாபாவின் ஆன்மிக நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் திரண்டார்கள். கூட்டம் நடைபெற்ற இடத்தில் காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் வெளியேற முயன்றார்கள். திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பலர் கீழே விழந்தார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உள்பட 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுதொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் மத போதகர் போலோ பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.
2025 பெங்களூரு: 11 பேர் பலி
அண்மையில், பெங்களூருவில் 2025 ஜூன் 4 அன்று ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்கள் திரளாகக் கூடியதில் நெரிசல் ஏற்பட்டது. இந்த மக்கள் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
2023 இந்தூர்: 31 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த 2023 மார்ச் 31-ல் நடைபெற்ற ராமநவமி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 36 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
2022 ஜம்மு காஷ்மீர்: 12 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் கடந்த 2022 ஜனவரி 1-ல் பக்தர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தார்கள்.
2017 மும்பை: 23 பேர் பலி
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் மத்திய ரயில் நிலையத்தில், கடந்த 2017 செப்டம்பர் 29-ல் குறுகிய பாலத்தின் வழியாக ரயில் பிடிக்கக் கடந்து சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் 36க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
2015 ஆந்திரா: 27 பேர் பலி
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கடந்த 2015 ஜூலை 14-ல் நடந்த கோதாவரி புஷ்கரம் நிகழ்ச்சியில், ஆற்றில் நீராட வந்தவர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 27 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
2014 பாட்னா: 32 பேர் பலி
பிஹார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதானத்தில் கடந்த 2014 அக்டோபர் 3 அன்று நடைபெற்ற தசரா திருவிழாவில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 32 பேர் உயிரிழந்தார்கள். 26 பேர் பலத்த காயமடைந்தனர்.
2013 மத்தியப் பிரதேசம்: 115 பேர் பலி
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்னாகர் கோவிலில் கடந்த 2013 அக்டோபர் 13-ல் நடைபெற்ற நவராத்திரி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது மக்கள் கடந்து சென்ற ஆற்றுப்பாலம் சேதமடைந்திருப்பதாக வெளியான வதந்தியால் அச்சமடைந்தவர்கள் முண்டியடித்ததில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 115 பேர் உயிரிழந்தனர் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
2011 சபரிமலை: 104 பேர் பலி
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சபரிமலையில், கடந்த 2011 ஜனவரி 14 அன்று ஜீப் ஒன்று ஆட்டோ மீது மோதியது. அப்போது மலைப்பகுதியில் ஜோதியைக் கண்ட பிறகு ஒரே நேரத்தில் குறுலான பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இதனால் பீதியில் முண்டியடித்துக்கொண்டு இருட்டியில் பக்தர்கள் கீழே இறங்கியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 104 பக்தர்கள் பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2010 உத்தரப் பிரதேசம்: 63 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர்க் மாவட்டத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இலவச சேலை, உணவு வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 63 பக்தர்கள் உயிரிழந்தார்கள்.