கோப்புப்படம் 
இந்தியா

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல்: ராகுல் காந்தி

கிழக்கு நியூஸ்

பாஜக ஆட்சியில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஃபைனான்சியல் டைம்ஸில் வெளியான கட்டுரையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு:

"பாஜக ஆட்சியில் நடந்துள்ள மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த ஊழல் ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டிருக்கிறது. தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு அதிக தொகைக்கு விற்று, சாமானிய மக்கள் செலுத்திய மின் கட்டணம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்துள்ளார் மோடியின் நெருங்கிய நண்பர் அதானி.

வெளிப்படையான இந்த ஊழல் குறித்து அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை மௌனம் காக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும். ஜூன் 4-க்கு பிறகு இண்டியா கூட்டணி அரசு இந்த மெகா ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளும்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் உயர்ரக நிலக்கரியை அதானி நிறுவனம் விற்பனை செய்திருக்க வேண்டும். ஆனால், தரம் குறைந்த நிலக்கரியையே அதானி குழுமம் விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடையும் என்றும் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.