கோப்புப்படம் ANI
இந்தியா

கியா மோட்டார்ஸ் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு

5 ஆண்டுகளாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல்.

கிழக்கு நியூஸ்

ஆந்திரத்தில் செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் ஆலையில் 900 என்ஜின்கள் திருடுபோயுள்ளதாக நிறுவனம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டா அருகே கியா மோட்டார்ஸ் ஆலை இயங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் கியா நிறுவனத்தால் ஆண்டு இறுதி கணக்கு பார்க்கப்பட்டுள்ளது. அப்போது ஆலையிலிருந்து 900 என்ஜின்கள் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கியா மோட்டார்ஸ் சார்பில் மார்ச் 19 அன்று பெனுகொண்டா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் முறையாகப் புகாரளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் இதுதொடர்பாக புகாரளிக்க வேண்டாம் எனவும் தனிப்பட்ட முறையில் காவல் துறை சார்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட பிறகே முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெனுகொண்டா டிஎஸ்பி வெங்கடேஸ்வருலு வழக்கை விசாரித்து வரும் குழுவில் அங்கம் வகிக்கிறார். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், "முதற்கட்ட காவல் துறை விசாரணையில் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் திட்டம் வகுக்கப்பட்டு, படிப்படியாக திருட்டு நடந்துள்ளது. நிச்சயமாக நிறுவனத்தில் பணியாற்றும் யாரோ ஒருவருடைய வேலையாகவே இருக்கும். இந்தத் திருட்டுச் சம்பவத்தில், நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் இடையே ஓர் இணக்கம் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்றார்.

காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதால் கியா மோட்டார்ஸ் இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் உள்ளது.