இந்தியா

மத்திய அரசு ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி!

வருந்தத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகரில் மத்திய அரசுக்குச் சொந்தமாக ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று (ஜன.24) காலை 10 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும், மருத்துவக் குழுவினரும் வருகை தந்தனர்.

பண்டாரா ஆயுத தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்துச் சத்தம் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், `வெடி விபத்திற்குப் பிறகு அந்தப் பிரிவின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தபோது குறைந்தபட்சம் அங்கே 14 தொழிலாளிகள் இருந்தனர்’ என்றார்.

இது தொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, `வருந்தத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வெடி விபத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

வெடி விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், `இது மோடி அரசின் தோல்வி’ என்று விமர்சித்தார். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.