படம்: https://x.com/ani_digital
இந்தியா

அசாமில் பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டது

"அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள்."

சுவாமிநாதன்

அகர்தாலா - லோக்மான்யா திலக் விரைவு ரயில் அசாமில் திபலாங் ரயில் நிலையம் அருகே மாலை 3.55 மணியளவில் தடம்புரண்டது.

விபத்து பற்றி ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எஞ்ஜின் உள்பட 8 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இருந்தபோதிலும் உயிரிழப்புகள் நிகழவில்லை. யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை" என்றார்.

அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"அகர்தலா - லோக்மான்யா திலக் விரைவு ரயிலின் (12520) 8 பெட்டிகள் பிற்பகல் 3.55 மணியளவில் தடம்புரண்டது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளார்கள். ரயில்வே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். மீட்பு ரயிலானது சம்பவ இடத்தை விரைவில் சென்றடையும். உதவி எண்கள் - 03674 263120, 03674 263126" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழியில் செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்து மீட்புப் பணிகளுக்கான ரயிலும் விரைவில் சென்றடையவுள்ளதாகத் தெரிகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.