கோப்புப்படம் 
இந்தியா

15 நாள்களில் ஏழாவது பாலம் இடிந்து விழுந்தது: பிஹாரில் தொடரும் சோகம்!

பிஹாரில் கடந்த சில நாள்களாகப் பாலங்கள் இடிந்து வரும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த அந்த மாநில அரசு உயர்நிலைக் குழு அமைத்துள்ளது.

கிழக்கு நியூஸ்

பிஹாரில் கடந்த 15 நாள்களில் ஏழாவது பாலம் இடிந்து விழுந்தது பேசுபொருளாகியுள்ளது.

பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியின் குறுக்கே பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

பிஹாரில் கடந்த 15 நாள்களில் ஏழாவதாக ஒரு பாலம் இடிந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. சிவான் மாவட்டத்தில் கடந்த 11 நாள்களில் இடிந்து விழுந்துள்ள இரண்டாவது பாலம் இது. இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்தப் பாலம் 1982-83-ல் கட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாள்களாகப் பாலத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றன. கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

பிஹாரில் கடந்த சில நாள்களாகப் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக விசாரிக்க அந்த மாநில அரசு உயர்நிலைக் குழு அமைத்துள்ளது.