ஜூன் 10 முதல் 5 மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி கடந்த ஜூன் 12-ல் பதவியேற்றுக் கொண்டார். பாஜக ஆட்சி பதவியேற்புக்கு இரு நாள்கள் முன்பிலிருந்து, அதாவது ஜூன் 10 முதல் நவம்பர் 22 வரை எடுக்கப்பட்ட தரவுகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிஷா முதல்வர் மாஜி அந்த மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கூறிய தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் 509 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள். 41 கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதுதவிர 459 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன, 161 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒடிஷாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என 9,248 வழக்குகள் பதிவாகியுள்ளன. வரதட்சணை கொடுமையில் 24 பேர் உயிரிழந்துள்ளார்கள். வரதட்சணை தொடர்புடையத் துன்புறுத்தலாக 5,398 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ஆதிராஜ் மோகன் எழுப்பிய எழுத்துப்பூர்வ கேள்விக்கு முதல்வர் மாஜி இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்தத் தரவுகள் நாடு முழுக்க அதிர்ச்சியடையச் செய்துள்ளது.