ANI
இந்தியா

கொரோனா: நாடு முழுக்க ஒரே நாளில் 685 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 265 பேர்.

கிழக்கு நியூஸ்

கொரோனா நோய்த் தொற்றால் நாடு முழுக்க மே 31 காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியா முழுக்க கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறகு. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மே 31 அன்று காலை தரவுகளின்படி, இந்தியா முழுக்க 3,395 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தம் 1,435 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 685 பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 265 பேர்.

நோய்த் தொற்று காரணமாக கடந்த ஜனவரி 1-க்கு பிறகு 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்களில் 4 பேர் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள். பெரும்பாலான உயிரிழப்புகள் இணை நோய் முக்கியக் காரணமாக இருந்துள்ளது மத்திய சுகாதாரத் துறையின் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

இதில் அதிகபட்சமாக கேரளத்தில் 1,336 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் 185 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 195 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.

முன்னதாக, தமிழ்நாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், "நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியோர்கள், சிறுநீரக பாதிப்பு உள்பட பல்வேறு உடல் உபாதைகளுடன் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு சென்றால் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார் மா. சுப்பிரமணியன்.