ANI
இந்தியா

53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ரயில் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த நிர்வாகரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும்

ராம் அப்பண்ணசாமி

ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் கழித்து டெல்லியில் நடந்த 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வதிப்புகள் சம்மந்தமான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பால் கேன்கள், சோலார் குக்கர்கள் மற்றும் தீயணைப்பான்கள் உட்பட அனைத்து விதமான தெளிப்பான்களுக்கும் 12 % ஜிஎஸ்டி வரி வதிக்கப்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்டை பெட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி 18-ல் இருந்து 12 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள், அதாவது நடைமேடை பயணச்சீட்டு, பேட்டரி வாகனங்கள், காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள் போன்றவற்றின் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, கல்வி நிலையங்களுக்கு வெளியே இருக்கும் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் அதற்குச் செலுத்தும் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரி விலக்கைப் பெற ஒரு மாதத்திற்கான விடுதிக் கட்டணம் ரூ. 20 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவுன்சில் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெறும் 54வது கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி சம்மந்தமான முக்கிய நிர்வாகரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கடந்து ஜூலை 1, 2017-ல் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி, அன்றைய மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய-மாநில அரசுகள் இணைந்து `ஜிஎஸ்டி கவுன்சில்’ என்ற அமைப்பின் வழியாக நிர்வகித்து வருகின்றன. இந்த கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சரும், உறுப்பினர்களாக மாநில நிதி அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு வருடத்தில் நான்கு முறை, அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.