சியாச்சின் பனிப்பாறை ANI
இந்தியா

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்பு, இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட 5 ஆபரேஷங்கள்!

இந்தியாவின் இராணுவத் தலையீட்டால், மாலத்தீவில் ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன.

சிந்தூருக்கு முன்பு, இந்திய பாதுகாப்புப் படைகளால் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 5 ஆபரேஷங்கள்:

ஆபரேஷன் பந்தர் (2019):

2019 பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வைத்து சிஆர்பிஎஃப் வாகனங்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஆபரேஷன் பந்தர் என்ற பெயரில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் விஜய் (1999):

கார்கில் போரின்போது பாகிஸ்தான் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்பதற்காக, மே 1999-ல் தொடங்கப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் விஜய் எனப் பெயரிடப்பட்டது.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் துருப்புக்களை வெற்றிகரமாகப் பின்நோக்கி நகர்த்தி, அப்பகுதியில் இருந்த முக்கியமான நிலைகளை இந்தியா கைப்பற்றியது; போரில் இந்தியாவின் வெற்றிக்கு இந்நடவடிக்கை வழிவகுத்தது.

ஆபரேஷன் சஃபேத் சாகர் (1999):

கார்கில் போரில் இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு சஃபேத் சாகர் என்று பெயரிடப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைந்திருந்த கார்கில் பகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் துருப்புகளை விரட்டியடிக்க தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் இந்திய விமானப்படை நடத்தியது.

1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்த சமயத்தில்தான் ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆபரேஷன் கேக்டஸ் (1988):

1988-ம் ஆண்டு மாலத்தீவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அங்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆபரேஷன் கேக்டஸ் என்று பெயரிடப்பட்டது.

இந்திய இராணுவத்தின் தலையீட்டால், தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் (PLOTE) தலைவர் உமா மகேஸ்வரனின் உதவியுடன் மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

ஆபரேஷன் மேகதூத் (1984):

ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் அமைந்திருந்த முக்கியமான நிலைகளை பாதுகாக்க, இந்திய பாதுகாப்புப் படைகள் ஏப்ரல் 1984-ல் ஆபரேஷன் மேக்தூத்தை தொடங்கின.

உயரமான இடங்களில் அமைந்திருந்த விமான தளங்களுக்கு துருப்புகளை இந்திய விமானப்படை கொண்டு சென்றது. அங்கிருந்து Mi-17, Mi-8, சேட்டக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்கள் மூலம், வீரர்களும், தடவாளங்களும் பனிப்பாறை பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

சியாச்சின் பனிப்பாறை பகுதியைக் கைப்பற்றியதன் மூலம், பாகிஸ்தானுக்கு எதிராக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சாதகத்தை இந்தியா பெற்றது.