ANI
இந்தியா

லடாக்கில் 5 இராணுவ வீரர்கள் மரணம்

ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பீரங்கி வண்டி அடித்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஜூன் 28-ல் இந்தியா-சீனா சர்வதேச எல்லையோரப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மரணமடைந்தனர்

லடாக் யூனியன் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தௌலத் பெக் ஓல்டி எனும் இடத்தில் பீரங்கி வண்டியின் மூலம் ஷியோக் ஆற்றைக் கடக்க முற்பட்டனர் ராணுவ வீரர்கள். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பீரங்கி வண்டி அடித்துச் செல்லப்பட்டு விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் பீரங்கிக்குள் இருந்த ஐந்து ராணுவ வீரர்களும் மரணமடைந்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.

`லடாக்கில் பிரங்கி வண்டியில் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த துணிச்சலான நமது ஐந்து வீரர்கள் மரணமடைந்தது குறித்து வருத்தமடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் நாடு அவர்களுடன் நிற்கிறது‘ என்று தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

`லடாக்கில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தைக் கேட்டு துயரமடைந்தேன். இந்த துக்கமான நேரத்தில் நமது வீரர்களின் சேவைக்கு இந்த நாடு வணக்கம் செலுத்துகிறது’ என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.