மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் வழங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இது தொடர்பான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கும் மத்திய அரசு ஊழியர்கள் இந்த சிறப்பு தற்செயல் விடுப்புக்குத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அமைப்பின் (NOTTO) இணையத்தளத்தில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் அதன் தலைவரும் மருத்துவருமான அனில் குமார்.
உடல் உறுப்பு தானத்தை ஒருவரிடம் இருந்து பெருவதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாகும். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்மந்தப்பட்ட நபர் பூரணமாகக் குணமடைவதற்குக் கால அவகாசம் தேவைப்படும்.
இவற்றை கருத்தில் கொள்ளும் வகையிலும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த 42 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவர் ஆலோசனைப்படி இந்த சிறப்பு விடுப்பை அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே சம்மந்தப்பட்ட ஊழியர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.