இந்தியாவில் 40% முதல்வர்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ஏடிஆர்) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் இணைந்து நடத்திய ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், தாங்கள் கடைசியாகப் போட்டியிட்ட தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவில் இந்தியா மொத்தமுள்ள முதல்வர்களில் 40% பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது, 30 முதல்வர்களில் 12 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 10 பேர் மீது, அதாவது 33% பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் போன்ற தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிக குற்றவியல் வழக்குகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 89 வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது 13 வழக்குகள் உள்ளன. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5 வழக்குகள் உள்ளன.
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் மீது தலா 4 வழக்குகள் உள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது இரு வழக்குகளும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது ஒரு வழக்கும் உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஆகஸ்ட் 20 அன்று சர்ச்சைக்குரிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தார். பிரதமரும், முதல்வர்களும் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ச்சியாக 30 நாள்கள் வரை கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய இந்த மசோதாக்கள் வழிவகை செய்கின்றன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
Chief Ministers | MK Stalin | ADR | Association for Democratic Reforms | Criminal Cases