சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்புப் படையினரால் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், இந்த என்கவுண்டரில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
தெற்கு சத்தீஸ்கரின் நாராயண்பூர், தண்டேவாடா மாவட்டங்களை ஒட்டி உள்ள அபுஜ்மாதில் வனப்பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த நக்சல்களைத் தேடும் பணியில் நேற்று (ஜன.4) மாலை தொடங்கி சிறப்புப் பாதுகாப்புப் படையினரும், மாவட்ட ரிசர்வ் காவல் படையினரும் கூட்டாக ஈடுபட்டனர்.
அப்போது, அபுஜ்மாத் வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்த துப்பாக்கிச் சூட்டில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அத்துடன் இந்த என்கவுண்டரில் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார்.
இந்த என்கவுண்டர் குறித்த விரிவான தகவல்களை சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதி ஐ.ஜி. சுந்தர்ராஜ் வெளியிட்டார். சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ல் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 2026-க்குள் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்தார். கடந்த வருடம் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 219 நக்சல்களில், சுமார் 217 நக்சல்கள் பஸ்தர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் கடந்த வருடத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.