ANI
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நான்கு இராணுவ வீரர்கள் வீர மரணம்

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள தேசா காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நான்கு பேர் மரணமடைந்தனர்.

நேற்று (ஜூலை 15) மாலை காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள தேசா காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள தாரி கோடே என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து சம்மந்தப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது இந்திய ராணுவம்.

அப்போது ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஐந்து ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த ஐந்து ராணுவ வீரர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு ராணுவ அதிகாரி உள்ளிட்ட 4 வீரர்கள் இன்று காலை மரணமடைந்தனர்.  

இந்த சம்பவம் குறித்து, `கேப்டன் பிரிஜேஷ் தாப்பா, நாயக் ராஜேஷ், சிப்பாய்கள் பிஜேந்திரா மற்றும் அஜய் ஆகியோர் டோடா பகுதியில் நடந்த தீவிரவாத துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளனர். இந்த துக்கமான நேரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் இந்திய ராணுவம் துணை நிற்கிறது’ என்று இந்திய இராணுவத்தின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டோடா பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது இந்திய ராணுவம். கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.