சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில், ரூ. 19 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 நக்சல்கள் சரணடைந்து மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயன்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
நக்சல்கள் சரணடைந்தது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா பேசியதாவது,
`பஸ்தார் பகுதியில் உள்ள பிஜாப்பூரில், 30 நக்சல்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதுவரையிலான மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று. சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இது நடந்தேறியுள்ளது.
நக்சல்கள் பொது நீரோட்டத்தில் இணைந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்...’ என்றார்.
சரணடைந்த நக்சல்களை காவல்துறையினர் பாராட்டினார்கள். முன்னதாக, கரியாபந்த் மாவட்டக் காவல்துறை மேற்கொண்ட முயற்சியின் பேரில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று, நான்கு நக்சல்கள் சரணடைந்தனர்.
30 நக்சல்கள் சரணடைந்தது தொடர்பாக ராய்ப்பூர் சரக காவல்துறை ஐஜி அம்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், `நக்சல் அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் இந்த வன்முறைப் பாதையை விட்டுவிட்டு பொது நீரோட்டத்தில் இணைய விரும்புவதாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள், ஆனால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள்...
அவர்கள் மீது மொத்தமாக ரூ. 19 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது..’ என்றார்.
இதற்கிடையே, பிஜாப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று நக்சல்கள் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர் என்று பஸ்தார் சரக ஐஜி பி. சுந்தர்ராஜ் தகவல் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.