கோப்புப் படம் ANI
இந்தியா

மக்களவைத் தேர்தல்: 93 தொகுதிகளில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு

யோகேஷ் குமார்

93 தொகுதிகளில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.

கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ளது.

கோவாவில் இரு தொகுதிகள், குஜராத்தில் 25 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், மஹாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், பிஹாரில் 5 தொகுதிகள், அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள் மற்றும் கர்நாடகத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்ட காரணத்தால், 25 தொகுதிகளில் மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.