ANI
இந்தியா

2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் முழுமையாக வங்கிக்குத் திரும்பவில்லை: ஆர்பிஐ

கிழக்கு நியூஸ்

ஏறத்தாழ 2.2 சதவீதம் அல்லது ரூ. 7,755 கோடி மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் தங்கள் வசம் வந்துசேரவில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த மே 19, 2023-ல் முடிவு செய்தது. அப்போதைய நிலவரப்படி, ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள அக்டோபர் 7, 2023 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அஹமதாபாத், பெங்களூரு, பெலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவாஹாடி, ஹைதராபாத், ஜெய்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, நாக்பூர், புதுதில்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள ஆர்பிஐ அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

எனினும், புழக்கத்திலிருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் ஏறத்தாழ 2.2 சதவீதம் அல்லது ரூ. 7,755 கோடி மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஆர்பிஐ வசம் திரும்பவில்லை.

2,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

மற்ற ரூபாய் நோட்டுகள் உரிய அளவில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதால், 2,000 ரூபாய் நோட்டுகளின் தேவை பூர்த்தியானது. இதனால், 2018-19 முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டது.