ஆந்திராவின் கர்னூல் அருகே விபத்தில் சிக்கித் தீப்பிடித்த சொகுசுப் பேருந்து  ANI
இந்தியா

ஆந்திராவில் பேருந்து தீப்பற்றி விபத்து: 21 பேர் உயிரிழந்த சோகம் | Kurnool | Bus Accident |

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர்...

கிழக்கு நியூஸ்

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இருசக்கர வாகனத்தில் சொகுசு பேருந்து மோதி தீப்பற்றிய விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு 10.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து, 41 பயணிகளுடன் ஆந்திராவின் கர்னூல் வழியாக பெங்களூரை நோக்கிச் சென்றது. அப்போது, கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கியது.

இதை அறியாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். இதில் பெட்ரோல் டேங்க் வெடித்து பேருந்தில் தீப்பற்றியது. இதையறிந்து கீழ் இருக்கையில் இருந்த பயணிகள் துரிதமாகச் செயல்பட்டு பேருந்திலிருந்து தப்பினர். ஆனால் மேலிருக்கையில் படுத்திருந்த பயணிகள் இறங்குவதற்குள் தீ மளமளவெனப் பரவியதில் பேருந்து மொத்தமும் தீப்பிடித்தது. இதனால் பேருந்துக்குள் சிக்கிய சுமார் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கர்னூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பேருந்து தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.

21 people tragically killed after a tourist bus collided with a two-wheeler and caught fire near Kurnool in Andhra Pradesh.