சித்திரவதைகள், நம்பகத்தன்மையற்ற சாட்சியங்கள் மற்றும் நடைமுறை குறைபாடுகள் ஆகிய குற்றச்சாட்டுகளை மேற்கோள்காட்டி 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்த 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 21) விடுவித்தது.
வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. தீர்ப்பின் சுருக்கத்தைப் படித்த உயர் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் பல ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களை திடீரென அடையாளம் கண்டது குறித்துக் கேள்வி எழுப்பியது.
உலகின் மிகவும் பரபரப்பான நகர்ப்புற ரயில் பாதைகளில் ஒன்றான மும்பையின் புறநகர் ரயில் வலையமைப்பின் மேற்கு வழித்தடத்தில், கடந்த 11 ஜூலை 2006 அன்று தொடர்ச்சியாக ஏழு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறின.
குறிப்பாக, மாலை 6.24 மணி முதல் 6.35 மணி வரை வெறும் 11 நிமிடங்களுக்குள் புறநகர் ரயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளை குறிவைத்து, குண்டுவெடிப்புகள் நடைபெற்றன. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 12 பேரில், ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து மாநில அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்கத் தொடங்கி, சுமார் ஆறு மாத காலம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பு மீதுள்ள கடுமையான குறைபாடுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முக்கியமான சாட்சிகள் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், சித்திரவதையின் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.