ANI
இந்தியா

2000 முதல் 2025 வரை: ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா அறிவித்து வருகிறது.

கிழக்கு நியூஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதைக் கண்டிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா அறிவித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க தாக்குதல் சம்பவங்களைப் பார்க்கலாம்.

மார்ச் 21, 2000

அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியா வருவதற்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 2, 2000

அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற மக்கள் மீது நுன்வான் பேஸ் முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற 21 பேர், கடை வைத்திருந்த உள்ளூர் முஸ்லிம்கள் 7 பேர் உள்பட 32 பேர் உயிரிழந்தார்கள்.

ஜூலை 2001

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட மக்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டார்கள். இம்முறை அனந்த்நாக் மாவட்டத்தில் ஷேஷ்நாக் பேஸ் முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 8 பேர் யாத்திரை மேற்கொண்டவர்கள், 3 பேர் முஸ்லிம் மக்கள் மற்றும் இருவர் பாதுகாப்புப் படையினர்.

அக்டோபர் 1, 2001

ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது கார் மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல். இதில் 36 பேர் உயிரிழந்தார்கள். ஜெய்ஷ்-ஏ முஹமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

2002

அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட மக்கள் சந்தன்வாரி பேஸ் முகாமில் வைத்து குறிவைக்கப்பட்டார்கள். இதில் யாத்திரை மேற்கொண்ட 11 பேர் உயிரிழந்தார்கள்.

நவம்பர் 23, 2002

தெற்கு காஷ்மீரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் மூன்று பெண்கள் இரு குழந்தைகள், 9 பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்தார்கள்.

மார்ச் 23, 2003

புல்வாமா மாவட்டத்தில் ராணுவ சீருடையில் காஷ்மீரி பண்டிட்டுகள் காலனியில் நுழைந்தார்கள் பயங்கரவாதிகள். 11 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 24 காஷ்மீரி பண்டிட்டுகள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜூன் 13, 2005

புல்வாமாவில் அரசுப் பள்ளி முன் மக்கள் அதிகளவில் கூடும் சந்தையில் காருக்கு வெடிவைக்கப்பட்டது. இதில் இரு பள்ளிக் குழந்தைகள், மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

ஏப்ரல் 14, 2006

ஸ்ரீநகரில் கையெறிகுண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழக்க, 44 பேர் காயமடைந்தார்கள்.

ஜூன் 12, 2006

குல்காமில் நேபாளம் மற்றும் பிஹாரைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரு இஸ்லாமிய ராணுவ வீரரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரேயொரு முஸ்லிம் தொழிலாளி மட்டுமே இந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

ஜூலை 11, 2006

ஸ்ரீநகரில் கையெறிகுண்டு வீசி மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தார்கள். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

செப்டம்பர் 18, 2016

உரி ராணுவ முகாமில் ஜெய்ஷ்-ஏ-முஹமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள்.

ஜூலை 10, 2017

குஜராத்திலிருந்து அமர்நாத் யாத்திரை சென்றவர்களின் பேருந்து குறிவைத்து தாக்கப்பட்டது. குல்காமில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள்.

பிப்ரவரி 14, 2019

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் படையினர் வாகனம் மீது கார் மூலம் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 35 பேர் காயமடைந்தார்கள்.

மார்ச் 6, 2022

கையெறிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 70 வயது இஸ்லாமியர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜனவரி 1, 2023

ரஜௌரியில் பயங்கரவாதிகள் இருவர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஹிந்துக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 5 பேர் கொல்லப்பட்டார்கள்.

2022

பிஹாரிலிருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

ஜூன் 2, 2022

17 வயது புலம்பெயர் தொழிலாளர் புட்காம் மாவட்டத்தில் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட் 4, 2022

புல்வாமாவில் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தியதில் மற்றொரு புலம்பெயர் தொழிலாளர் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட் 12, 2022

பந்திபோரா மாவட்டத்தில் 19 வயது புலம்பெயர் தொழிலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2024

ஸ்ரீநகரில் பஞ்சாபைச் சேர்ந்த தொழிலாளி கொல்லப்பட்டார். பிஹாரைச் சேர்ந்த மற்றொரு புலம்பெயர் தொழிலாளர் அனந்தாக் மாவட்டத்தில் கொல்லப்பட்டார்.

அக்டோபர், 2024

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் மற்றும் மருத்துவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்.

ஏப்ரல் 22, 2025

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்கள். இதில் 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் காயமடைந்துள்ளார்கள்.