@ani
இந்தியா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை: 18 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு

16 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில்..

யோகேஷ் குமார்

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தையை, 18 மணி நேரத்திற்குப் பிறகு மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ், இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது.

சதீஷின் தந்தை சங்கரப்பா என்பவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றை அமைத்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் அதனை மூடாமல் அப்படியே விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை, 2 வயது குழந்தையான சாத்விக் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாத்விக்கின் பெற்றோர் இது குறித்து காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், விடிய விடிய குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

16 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் 18 மணி நேரத்திற்குப் பிறகு மீட்புப் படையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதன் பிறகு அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.