இந்தியா

மக்களவைக் கூட்டத்தொடர்: எம்.பி.க்கள் பதவியேற்பு; இண்டியா கூட்டணி போராட்டம்

கிழக்கு நியூஸ்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது.

முதலிரு நாள்கள் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளார்கள்.

18-வது மக்களவையின் இடைக்காலத் தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, மகதாப் 18-வது மக்களவையின் இடைக்காலத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் புதிதாகப் பதவியேற்கும் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மக்களவையில் பதவியேற்றுக்கொண்டார்கள்.

இதனிடையே, மகதாப் மக்களவையின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டதில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. 8-வது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வான கேரள காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ் மக்களவையின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் கோரிக்கையாக உள்ளது.

கே. சுரேஷ் நியமிக்கப்படாததைக் கண்டித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே கையில் அரசியலமைப்புச் சட்ட நூலைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அரசின் போக்கு இன்னும் அதே ஆணவத்துடன் உள்ளது. 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தலித் எம்.பி. கே. சுரேஷை மக்களவையின் இடைக்காலத் தலைவராக நியமிக்கவில்லை. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளிடம் எந்த ஆலோசனை நடத்தாமல் இப்படியொரு முடிவை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது" என்றார்.