உ.பி. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ல் தொடங்கியது. பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்நிகழ்வில் ஒட்டுமொத்தமாக சுமார் 40 கோடி மக்கள் பங்கேற்று கங்கையில் புனித நீராடுவார்கள் என உ.பி. மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், தை அமாவாசையான இன்று (ஜன.29) திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடும் வகையில், அதிகாலை நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இதனால் அங்கே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த பலரும் அருகில் உள்ள ஸ்வரூப் ராணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் இதுவரை உ.பி. அரசு சார்பில் அதிகாரபூர்வ செய்தி வெளியாகவில்லை.
இதனை அடுத்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.