உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
`(ரஷ்யாவில்) பினில் பாபு உயிரிழந்தது துரதிஷ்டவசமானது. பினில் பாபுவின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்தோம். ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரது உடலை ரஷ்யாவிலிருந்து விரைவில் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
போரில் காயமுற்ற மற்றொரு நபர், மாஸ்கோவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் இந்தியத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரது சிகிச்சை நிறைவுபெற்றதும், விரைவில் இந்தியா திரும்புவார். எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்கள்படி, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 126 இந்தியர்களில், 96 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பிவிட்டனர்.
மீதமுள்ள 30 பேரில், 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ரஷ்யாவுக்குச் சென்ற இந்தியர்களின் குடியுரிமை தொடர்பான விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை. அதேநேரம் 16 இந்தியர்களைக் காணவில்லை என ரஷ்ய அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களை விரைவில் எங்களிடம் ஒப்படைக்குமாறு ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை குறித்து செய்தியாளர்கள் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், `நமது தேவையைக் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்றபடி கச்சா எண்ணெய் வாங்குகிறோம். இனியும் அதே நடைமுறை தொடரும்’ என்றார்.