கோப்புப்படம் 
இந்தியா

மஹாராஷ்டிரத்தில் ரயில் மோதி 11 பேர் பலி!

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார் மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.

ராம் அப்பண்ணசாமி

புஷ்பக் விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 11 பயணிகள், மஹாராஷ்ரத்தின் ஜல்காவுன் மாவட்டத்தில் வைத்து கர்நாடக விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னெள நோக்கிச் செல்லும் புஷ்பக் விரைவு ரயில் இன்று (ஜன.22) காலை 8.25 மணி அளவில் மும்பையில் இருந்து கிளம்பியது. மாலை 5 மணி அளவில் மஹாராஷ்டிரத்தின் ஜல்காவுன் மாவட்டத்திலுள்ள பர்தாதே ரயில் நிலையத்திற்கு அருகே புஷ்பக் ரயில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, புஷ்பக் ரயிலின் சில பெட்டிகளில் புகைமூட்டம் கிளம்பியது. இதனால் அந்தப் பெட்டிகளில் இருந்த பயணிகள் சிலர் ரயிலில் இருந்து குதித்து வெளியேறியதாகவும், வேறு சிலர் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இதனை அடுத்து புஷ்பக் ரயிலில் இருந்து வெளியேறிய பயணிகள் மீது எதிர் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த கர்நாடகா விரைவு ரயில், எதிர்பாராவிதமாக மோதியது. இந்த விபத்தில் சுமார் 11 பயணிகள் வரை உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

பயணிகள் மீது ரயில் மோதிய சம்பவத்தைக் கேள்விப்பட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த பயணிகள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார் மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.