நாடு முழுக்க அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 10 ஆயிரம் மருத்துவ இடங்களைச் சேர்க்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
அடுத்த மூன்றாண்டுகளில் ரூ. 15,034 கோடி செலவில் புதிய மருத்துவ இடங்கள் சேர்க்கப்படவுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 83 மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 5,972 கோடி செலவில் 4,977 இளநிலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் என முடிவெடுக்கப்பட்டன. 72 மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 1,498 கோடி செலவில் புதிதாக 4,058 முதுநிலை மருத்துவ இடங்களைச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக 65 மருத்துவக் கல்லூரிகளில் ரூ. 4,478 கோடி செலவில் புதிதாக 4,000 மருத்துவ இடங்கள் சேர்க்க முடிவெடுக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ரூ. 15,034 கோடி செலவில் புதிதாக 5,023 இளநிலை மருத்துவ இடங்கள் மற்றும் 5,000 முதுநிலை மருத்துவ இடங்களைச் சேர்ப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் அளித்துள்ளது. மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக ஒரு மருத்துவ இடத்துக்கு ஏறத்தாழ ரூ. 1.5 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ. 10,303.20 கோடி. மாநில அரசுகளின் பங்களிப்பு ரூ. 4,731.30 கோடி.
இந்தியாவில் ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 1.2 லட்சம் இளநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. 74,306 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. கடந்த 2014-ல் 51,328 இளநிலை மருத்துவ இடங்கள் இருந்தன. 31,185 முதுநிலை மருத்துவ இடங்கள் இருந்தன.
Medical Seats | Union Cabinet | MBBS Seats |