ANI
இந்தியா

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 % இட ஒதுக்கீடு: கர்நாடக அரசு அறிவிப்பு

ராம் அப்பண்ணசாமி

கர்நாடக மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் உள்ள `சி மற்றும் டி’ நிலையிலான பதவிகளில் கன்னடர்களுக்கு 100 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கன்னட மக்களை முன்னிலைப்படுத்தும் விதமாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை நேற்று (ஜூலை 16) மாநில வேலைவாய்ப்பு தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த சட்ட மசோதாவின்படி, தனியார் நிறுவனங்களில் உள்ள 50 % மேலாண்மை பணி இடங்களும், 75 % மேலாண்மை அல்லாத பணி இடங்களும் கன்னடர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த சட்ட மசோதா கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தும். இவை போக, தனியார் நிறுவனங்களில் உள்ள `சி மற்றும் டி’ நிலையிலான பதவிகளில் 100 % கன்னட மக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

மேலும் இந்த சட்ட மசோதாவின்படி கன்னடர் ஒதுக்கீட்டின் கீழ் வேலையைப் பெற, ஒருவர் தன் பள்ளிப்படிப்பில் கன்னடத்தைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். அப்படிப் படிக்காதவர்களுக்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றி நடக்காத நிறுவனங்களுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்க சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிலிருந்து விலக்கு பெற தனியார் நிறுவனங்கள் அரசிடம் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

`கன்னட மண்ணில் கன்னடர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைத் தவிர்க்கவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை’ என்று இந்த சட்ட மசோதா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

`கர்நாடக மாநிலத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் எத்தனை கன்னட மக்கள் பணி புரிகிறார்கள் என்பதை தங்கள் நிறுவனத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும்’ என்று கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் டங்காடாகி அறிவித்திருந்தார்.