கோப்புப்படம் ANI
இந்தியா

ஆ. ராசா உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அறிக்கையை சமர்ப்பிக்க பாஜக முனைகிறது.

ராம் அப்பண்ணசாமி

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமலியில் ஈடுபட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், கடந்த ஆகஸ்ட் 8-ல் வக்ஃபு (திருத்தச்) சட்டமசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட வக்ஃபு மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் கடந்த நவம்பரில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லியில் இன்று (ஜன.24) இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று மசோதா தொடர்பான கருத்துகளை தெரிவிக்க ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முக்கிய இஸ்லாமிய மத தலைவரான மிர்வெய்ஸ் உமர் ஃபரூக் வருகை தந்தார். கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த உபர் ஃபரூக், வக்ஃபு சட்டதிருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறினார்.

கூட்டுக்குழுவின் கூட்டம் தொடங்கியதும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அறிக்கையை சமர்ப்பிக்க பாஜக முனைவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினார்கள். இதைத் தொடர்ந்து, ஆ. ராசா, எம்.எம். அப்துல்லா, கல்யாண் பானர்ஜி, நாசர் ஹுசைன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டார்கள்.

இதனை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெரும்பான்மை மக்களின் குரலை நசுக்க முற்படுவதாக குற்றம்சாட்டினார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே. அதன்பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு நடவடிக்கைகளில் பங்கேற்ற ஆ. ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு நாள் தடை விதித்து உத்தரவிட்டார் அதன் தலைவர் ஜெகதாம்பிகா பால்.