ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்துக்கு லட்சக்கணக்கானோர் வந்திருந்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் இன்று பெங்களூரு சென்றார்கள். விதான் சௌதாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஆர்சிபி வீரர்களைக் கௌரவித்தார்கள். இதைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பு, விதான் சௌதாவிலிருந்து திறந்தவெளிப் பேருந்தில் பேரணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அச்சம் காரணமாக இது ரத்து செய்யப்பட்டது.
இருந்தபோதிலும், ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்தில் கூடினார்கள். இதனால், கட்டுக்கடங்காத வகையில் ரசிகர்கள் எண்ணிக்கை இருந்தது. கூட்ட நெரிசல் ஏற்பட, 10 ரசிகர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "காவல் ஆணையர் மற்றும் எல்லோரிடமும் பேசியுள்ளேன். மருத்துவமனைக்குப் பின்னர் செல்வேன். நோயாளிகளைக் கவனித்து வரும் மருத்துவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சரியான எண்ணிக்கையைத் தற்போது கூற முடியாது. மக்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நேரத்தைக் குறைத்துக்கொண்டோம். வெறும் 10 நிமிடங்களில் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு மாற்ற முயற்சித்து வருகிறோம். லட்சக்கணக்கானோர் வந்திருந்தார்கள்" என்றார் டி.கே. சிவகுமார்.
உரிய திட்டமிடலின்றி இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன.
கர்நாடக பாஜக தலைவர் பிஒய் விஜயேந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், "11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக நீதித் துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்றார். 11 பேர் உயிரிழந்ததற்கு மாநில அரசே பொறுப்பு என ஆளும் காங்கிரஸ் அரசை கர்நாடக பாஜக சாடியுள்ளது.