விளையாட்டு

ஐபிஎல்-க்கு முக்கியத்துவமா..?: ஹேசில்வுட்டை சாடிய ஜான்சன்

"சாம் கான்ஸ்டஸ், ஜோஷ் இங்லிஸ், ஸ்காட் போலண்ட் உள்ளிட்டோரிடம் வேறு மாதிரியான மனநிலை உள்ளது."

கிழக்கு நியூஸ்

ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஐபிஎல் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்தது வியப்பளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இறுதிச் சுற்றில் 4-வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்தபோதும் அந்த அணியால் வெற்றியடைய முடியாமல் போனது. இதனால் ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். ஐபிஎல் போட்டியில் விளையாட வந்து தாமதமாகப் பயிற்சிக்குச் சென்ற ஹேசில்வுட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஸி. முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன்.

வெஸ்ட் ஆஸ்திரேலியனில் எழுதிய தனது கட்டுரையில், "சமீப ஆண்டுகளில் ஹேசில்வுட்டின் உடற்தகுதி குறித்த பிரச்னைகளைப் பார்த்துள்ளோம். ஆஸி. அணியின் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீட்டிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிக்கு அவர் முக்கியத்துவம் அளிக்கும் முடிவை எடுத்தது வியப்பளிக்கிறது" என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

மேலும், "எதிர்காலத்தை நோக்கி செல்லும்போது, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகிய நால்வரைக் கொண்டுள்ள வெற்றிகரமான பந்துவீச்சுப் படை, இனி நேரடித் தேர்வாக இருக்கும் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மூத்த வீரர்கள் ஆஷஸ் போட்டியுடன் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்தால், அது சரியான மனநிலை தானா என்ற கேள்வியை எழுப்புகிறது. அடுத்த டெஸ்ட் வீரர்களைத் தேர்வு செய்வதில் நம்பிக்கையைக் கட்டமைக்க வேண்டும்" என்று ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

"சாம் கான்ஸ்டஸ், ஜோஷ் இங்லிஸ், ஸ்காட் போலண்ட் உள்ளிட்டோரிடம் வேறு மாதிரியான மனநிலை உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தங்களை நிரூபிக்க உத்வேகத்துடன் காத்திருக்கிறார்கள். ஒன்றாக நிறைய சாதித்துள்ள வயதான அணி மீது மேலதிக விமர்சனங்களை வைக்கவில்லை.

ஆனால், சில கடினமான முடிவுகளை எடுக்க சரியான தருணத்தைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் அடங்கிய தொடர் தகுதியுடைய வீரர்களை ஜொலிப்பதற்கான அற்புதமான வாய்ப்பாக அமையலாம்" என்று ஜான்சன் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ச்சூழல் காரணமாக ஐபிஎல் 2025 போட்டி நடுவில் சில நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது. ஐபிஎல் 2025-ன் போட்டியில் இறுதிக்கட்டத்தில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஹேசில்வுட், பிளேஆஃப் சுற்றில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு மீண்டும் திரும்பினார். அவருடைய பங்களிப்பில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தாலும் ஆஸி. அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்றில் தோற்றதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் ஹேசில்வுட்.