ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் யஷ் தயால், உத்தரப் பிரதேச டி20 லீக் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயால். இவர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாதில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் யஷ் தயால் மீது பாலியல் புகார் ஒன்று உள்ளது. இதில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச டி20 லீக் போட்டியில் விளையாட யஷ் தயாலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. அதேசமயம், கோரக்பூர் லயன்ஸ் அணியின் உரிமையாளர் தரப்பில் கூறுகையில், உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் இதுமாதிரியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச டி20 லீக் போட்டிக்கான ஏலத்தில் கோரக்பூர் லயன்ஸ் அணியால் ரூ. 7 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, ராஜஸ்தான் வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் யஷ் தயால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இடைக்காலப் பாதுகாப்பு வழங்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-க்கு ஒத்திவைத்தது.
காஸியாபாத் வழக்கில் யஷ் தயால் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுக்க அலஹாபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Yash Dayal | Royal Challengers Bengaluru | RCB | FIR | UP T20 League | Uttar Pradesh T20 League | Gorakhpur Lions | Uttar Pradesh Cricket Association