விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 10-வது சுற்று!

10-வது சுற்றின் முடிவில் இருவரும் 5 - 5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

யோகேஷ் குமார்

குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10-வது சுற்று டிராவில் முடிந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷும் சீனாவின் டிங் லிரனும் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த நவ.25 அன்று தொடங்கியது.

டிசம்பர் 14 வரை கிளாசிகல் முறையில் 14 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தேவைப்பட்டால் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும். சாம்பியன் பட்டம் பெற 7.5 புள்ளியைப் பெற வேண்டும்.

குகேஷ் - டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரன், குகேஷை வீழ்த்தி ஒரு புள்ளியுடன் முன்னிலை பெற்றார்.

2-வது சுற்று டிராவில் முடிந்தது. எனினும் 3-வது சுற்றில் குகேஷ், டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். மேலும், கிளாசிகல் முறையில் முதல்முறையாக டிங் லிரனை வீழ்த்தியதும் அப்போதுதான்.

இதன் பிறகு நடைபெற்ற 6 சுற்றுகளும் டிராவில் முடிய 9-வது சுற்றின் முடிவில் இருவரும் 4.5 - 4.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 10-வது சுற்று நடைபெற்றது. இருவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாட இந்த ஆட்டத்திலும் முடிவு கிடைக்கவில்லை. எனவே இந்த சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.

10-வது சுற்றின் முடிவில் இருவரும் 5 - 5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர். இன்னும் 4 சுற்றுகள் மட்டுமே மீதமுள்ளது.

11-வது சுற்று நாளை (டிச. 8) நடைபெறவுள்ளது.