மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முழு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. 2013-க்குப் பிறகு முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது.
செப்டம்பர் 30-ல் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.
பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, பாகிஸ்தான் தனது ஆட்டங்கள் அனைத்தையும் கொழும்பில் விளையாடவுள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்டோபர் 5-ல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை அக்டோபர் 1-ல் எதிர்கொள்கிறது.
8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் எல்லா அணியும் மற்ற அணிகளுடன் தலா ஓர் ஆட்டத்தில் விளையாடுகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். கடந்தமுறை இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றமளித்தது.
பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதைப் பொறுத்து முதல் அரையிறுதி அக்டோபர் 29-ல் குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். நவம்பர் 2-ல் பெங்களூரு அல்லது கொழும்பில் இறுதிச் சுற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.