மகளிர் ஆசியக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி! ANI
விளையாட்டு

மகளிர் ஆசியக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி!

யோகேஷ் குமார்

மகளிர் ஆசியக் கோப்பை போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டி ஜூலை 19 அன்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் விளையாடும் இப்போட்டியில் இந்திய அணி நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில் நேபாளத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஷெஃபாலி வெர்மா மற்றும் ஹேமலதா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தனர். இருவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 122 ரன்கள் சேர்த்தனர்.

ஹேமலதா ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷெஃபாலி வெர்மா ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. ஏ பிரிவில் மற்றொரு அணியாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பி பிரிவில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறவுள்ளன என்பது இன்று இரவு தெரியவரும்.

இந்திய அணி விளையாடும் அரையிறுதி ஆட்டம் ஜூலை 26 அன்று நடைபெறவுள்ளது.