படம்: https://x.com/Wimbledon/media
விளையாட்டு

விம்பிள்டன் இறுதிச் சுற்று: விளையாட்டு வரலாற்றிலேயே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை

கிழக்கு நியூஸ்

விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலையில் விம்பிள்டன் இறுதிச் சுற்றின் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் மற்றும் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச்ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மோதுகிறார்கள். கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றிலும் இவர்கள் இருவர்தான் நேருக்கு நேர் மோதினார்கள். இதில் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

இவர்கள் இருவருமே மீண்டும் இறுதிச் சுற்றில் மோதவுள்ளதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த ஆட்டத்தின் டிக்கெட் விலை எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளைக் காட்டிலும் இதுவரை இல்லாத அளவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியை அருகிலிருந்து காண்பதற்கான இருக்கையின் டிக்கெட் விலை இந்திய மதிப்பின்படி, ரூ. 31,49,000 முதல் ரூ. 3,02,34,000 வரை இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்தபட்ச டிக்கெட் விலையே ரூ. 8.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, விம்பிள்டன் போட்டியைப் பிரபலப்படுத்த சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா உள்பட பல்வேறு விளையாட்டுகளிலிருந்து ஜாம்பவான்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.