ஜோகோவிச் @bbc
விளையாட்டு

என்னை அவமதித்த விம்பிள்டன் ரசிகர்கள்: ஜோகோவிச் குற்றச்சாட்டு!

யோகேஷ் குமார்

ரசிகர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பேசியுள்ளார்.

2024 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நெ. 2 வீரரும், 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவருமான ஜோகோவிச், உலகின் 15-ம் நிலை வீரரான ரூனாவை எதிர்கொண்டார்.

இதில், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் ஆட்டம் முடிந்தப்பின் பேசிய ஜோகோவிச், ரசிகர்களின் செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த ஆட்டத்தின் போது ரசிகர்கள் ரூனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது பெயரைச் சொல்லி கரகோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆனால், அது தன்னை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ஜோகோவிச் கூறியுள்ளார்.

ஜோகோவிச் பேசியதாவது:

“ரசிகர்கள் ரூனாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது என்னை எச்சரிக்கும் வகையில் இருந்தது. நிச்சயமாக அவர்கள் என்னை அவமதிக்கும்படி நடந்துக் கொண்டனர். 20 வருடங்களாக நான் இது போன்ற பல சூழல்களில் விளையாடி உள்ளேன். உங்களால் என்னை நெருங்க முடியாது” என்றார். மேலும், ரசிகர்களை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜோகோவிச்சை எதிர்கொண்ட ரூனா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“முதல்முறையாக இது யுஎஸ் ஓபனில் தொடங்கியது. ரசிகர்கள் என் பெயரைச் சொல்லும் போது அது அவரை அவமதிக்கும் வகையில் இருந்துள்ளது. அதன் பிறகும் நாங்கள் நிறைய ஆட்டங்களில் விளையாடினோம். இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அனைவரும் என் பெயரை சரியாக உச்சரிக்க மாட்டார்கள். இப்போது இங்கிலாந்திலும் எனது பெயரால் தான் பிரச்னை. ரசிகர்கள் என் பெயரை அழைத்த விதம் அவருக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் இருவருக்கும் அதரவு தெரிவித்தனர். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் என்னை விட சிறப்பாக விளையாடினார்” என்றார்.