நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் பதவி விலகல்! ANI
விளையாட்டு

நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் பதவி விலகல்!

2024 - 25 ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

யோகேஷ் குமார்

வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

இந்நிலையில் வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார். மேலும், 2024 - 25 ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் நியூசி. அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 40 டெஸ்ட், 91 ஒருநாள், 75 டி20 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டார் வில்லியம்சன். இவரது தலைமையில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூசிலாந்து அணி. மேலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. முன்னதாக வில்லியம்சன் 2022-ல் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.