இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப சில காலம் ஆகலாம் என்றும், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் முதல் இரு வாரங்களை அவர் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரின் கடைசி டெஸ்டிலிருந்து பாதியில் வெளியேறினார் ஜஸ்பிரித் பும்ரா. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பும்ரா இருப்பதாக அவரது மனைவி சஞ்சனா கணேசன் சமீபத்தில் தகவல் தெரிவித்தார். இதன் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், பும்ராவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பந்துவீசத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், நடப்பு ஐபிஎல் போட்டியின் முதல் இரு வாரங்கள் அவர் பங்கேற்பதில் சிக்கல்கள் நீடிப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக ஏப்ரல் முதல் வாரத்தில் முழு நேரப் பந்துவீச்சுக்கு பும்ரா திரும்பக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் மூன்று அல்லது நான்கு ஆட்டங்களில் பும்ரா பங்கேற்பதற்கு வாய்ப்பு இல்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீசத் தொடங்கியிருந்தாலும், எந்த ஒரு அசௌகரியமும் இல்லாமல் பந்து வீச முடிந்தால் மட்டுமே அவருக்கான முழு அனுமதியை மருத்துவக் குழு வழங்கும்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, ஐந்து டெஸ்டுகள் அடங்கிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஒரு வேளை டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா தொடரவில்லை என்றால், கேப்டன் பொறுப்புக்கான முதல் தேர்வாக பும்ரா இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது முழு உடற்தகுதியுடன் பும்ரா இருப்பது அவசியமாகியுள்ளது.