படம்: https://x.com/ZimCricketv
விளையாட்டு

367 ரன்களில் டிக்ளேர் செய்த வியான் முல்டர்: தப்பியது லாராவின் சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்காக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் வியான் முல்டர்.

கிழக்கு நியூஸ்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்தபோது, இன்னிங்ஸை டிக்ளேர் செய்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

இதன்மூலம், பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற சாதனை முறியடிக்கப்படாமல் தப்பியது.

ஜிம்பாப்வேவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி இரு டெஸ்டுகள் கொண்ட தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டெம்பா பவுமா, கேஷவ் மஹாராஜ் இல்லாத நிலையில் வியான் முல்டர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 465 ரன்கள் எடுத்திருந்தது. வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 264 ரன்கள் எடுத்திருந்தார்.

இரண்டாவது நாளான இன்றும் முல்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தென்னாப்பிரிக்காவுக்காக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். முச்சதம் அடித்தும் தனது அதிரடியைத் தொடர்ந்த வியான் முல்டர் 324 பந்துகளில் 350 ரன்கள் எடுத்தார். உணவு இடைவேளையின்போது வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கி வேகமாக விளையாடினால், நிச்சயம் பிரையன் லாராவின் 400 ரன்கள் எனும் உலக சாதனை முறியடிக்கப்படலாம் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும் விதமாக இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக முல்டர் அறிவித்தார்.

தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 626 ரன்கள் எடுத்துள்ளது. வியான் முல்டர் 367 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 367 ரன்கள் விளாசியதன் மூலம் ஏராளமான சாதனைகளை வியான் முல்டர் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்காக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர்

  • வியான் முல்டர் - 367* (334) vs ஜிம்பாப்வே, புலவாயோ, 2025

  • ஹஷிம் அம்லா - 311* (529) vs இங்கிலாந்து, தி ஓவல், 2012

கேப்டனாக அறிமுக டெஸ்டில் அதிக ரன்கள்

  • வியான் முல்டர் - 367* (vs ஜிம்பாப்வே, 2025)

  • கிரஹம் டௌலிங் - 239 (vs இந்தியா, 1968)

  • ஷிவ்நரைன் சந்தர்பால் - 203* (vs தென்னாப்பிரிக்கா, 2005)

டெஸ்டில் ஒருநாளில் அதிக ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்

  • வியான் முல்டர் - 264* (முதல் நாளில்)

  • கிப்ஸ் - 228 (vs ஜிம்பாப்வே, 2003)

அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர்

  • விரேந்தர் சேவாக் - 278 பந்துகள் (vs தென்னாப்பிரிக்கா, 2008)

  • வியான் முல்டர் - 297 பந்துகள் (vs ஜிம்பாப்வே, 2025)

  • ஹாரி புரூக் - 310 பந்துகள் (vs பாகிஸ்தான், 2024)

முச்சதம் அடித்த இளம் டெஸ்ட் கேப்டன்

  • வியான் முல்டர் (தென்னாப்பிரிக்கா) - 27 வயது 138 நாள்கள்

  • பாப் சிம்ப்சன் (ஆஸ்திரேலியா) - 28 வயது 171 நாள்கள்

டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

  • பிரையன் லாரா - 400* ரன்கள்

  • மேத்யூ ஹேடன் - 380 ரன்கள்

  • பிரையன் லாரா - 375 ரன்கள்

  • மஹேலா ஜெயவர்தனே - 374 ரன்கள்

  • வியான் முல்டர் - 367* ரன்கள்