மெக்கர்க் ANI
விளையாட்டு

உலகக் கோப்பை அணியில் மெக்கர்க் இடம்பெறாதது ஏன்? ஆஸ்திரேலிய கேப்டன் விளக்கம்

"கடந்த 18 மாதங்களாக ஹெட் மற்றும் வார்னர் ஆகியோர் அணிக்கு சிறந்தப் பங்களிப்பை அளித்துள்ளனர்".

யோகேஷ் குமார்

நடப்பு ஐபிஎல்-ல் அசத்திவரும் தில்லி அணியை சேர்ந்த மெக்கர்க் உலகக் கோப்பை அணியில் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கி வரும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மெக்கர்க் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

நடப்பு ஐபிஎல்-ல் அவர் 6 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதம் உட்பட 259 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 43.17, ஸ்ட்ரைக் ரேட் - 233.33. 23 சிக்ஸர்கள் மற்றும் 23 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“மெக்கரக் மிகவும் திறமையானவர். அவரின் ஆட்டத்தை அனைவரும் ரசிகின்றனர். குறிப்பாக தில்லி அணி அவரது திறமையை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால், எங்கள் அணியை பொறுத்தவரை நாங்கள் சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்துள்ளோம். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான ஹெட் மற்றும் வார்னர் கடந்த 18 மாதங்களாக அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

மெக்கர்க் இளம் வயதிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிக் பாஷ் போட்டியில் அவரது திறமையைப் பார்த்தோம். ஐபிஎல் போன்ற கடினமான போட்டியிலும் அசத்தி வருகிறார். நிச்சயம் அவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு” என்றார்.