ANI
விளையாட்டு

சிஎஸ்கேவின் இளம் தொடக்க வீரர்: யார் இந்த ஷேக் ரஷீத்?

பேட்டிங்கில் ஒரு குட்டி ருதுராஜ் கெயிக்வாடைப் பார்ப்பது போல அழகான டைமிங் ஷாட்களால் கலக்கினார்.

கிழக்கு நியூஸ்

இதுவரை இல்லாத அளவுக்குத் தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னெள அணிக்கு எதிராக இளம் வீரர் ஷேக் ரஷீத்தைத் தொடக்க வீரராகக் களமிறக்கியது.

20 வயது ரஷீத், சிஎஸ்கேவுக்காக விளையாடிய இளம் தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அவர் விளையாடுவது இதுவே முதல்முறை. லக்னெளவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திராவுடன் தொடக்க வீரராகக் களமிறங்கினார் ரஷீத்.

பேட்டிங்கில் ஒரு குட்டி ருதுராஜ் கெயிக்வாடைப் பார்ப்பது போல அழகான டைமிங் ஷாட்களால் கலக்கினார். இந்த வருடம் பவர்பிளேயில் சிஎஸ்கேவுக்கு கிடைக்காமல் இருந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். ரஷீத்தும் ரச்சின் ரவீந்திராவும் 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்கள்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஷேக் ரஷீத். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆந்திரத்துக்காக மேல் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர்.

முதல் தர கிரிக்கெட்டில் 19 ஆட்டங்களில் 37.62 சராசரியில் 1,204 ரன்களும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 11.63 சராசரியில் 128 ரன்களும் டி20யில் 28 ஆட்டங்களில் 1 சதம், 1 அரை சதம் உள்பட 379 ரன்களும் எடுத்துள்ளார். 2024-25 ரஞ்சி கோப்பையில் ஹைதராபாதுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2022-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ரஷீத் 4 ஆட்டங்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்தார்.

அப்போட்டியில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 94 ரன்கள் எடுத்தார். இறுதிச் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 50 ரன்கள் எடுத்து பெரிய ஆட்டங்களில் ஜொலிக்கக் கூடிய திறமை கொண்டவர் எனும் நம்பிக்கையை உருவாக்கினார் ரஷீத். 2023-ல் சிஎஸ்கே அணிக்குத் தேர்வான ரஷீத்துக்குக் கடந்த இரு வருடங்களாக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரஷீத்தை மீண்டும் தேர்வு செய்தது. அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு அவர் தேர்வானார்.

லக்னெளவை தோற்கடித்த பிறகு ரஷீத்தை வெகுவாகப் பாராட்டினார் தோனி.

ரஷீத் இன்று நன்றாகவே விளையாடினார். அவர் சில ஆண்டுகளாகவே சிஎஸ்கேவுடன் தான் பயணித்து வருகிறார். அவரிடம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். இந்த வருடம் வலைப்பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பேட்டிங் வரிசையில் மாற்றம் தேவைப்பட்டது. அவர் சிறப்பாக பேட் செய்தார். இது வெறும் தொடக்கம் தான். நல்ல துல்லியமான ஷாட்கள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. என்றார்.

முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே நிறைய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ரஷீத். அவருடைய அழகான ஷாட்கள் சிஎஸ்கேவுக்கு மேலும் வெற்றியைக் கொடுக்கட்டும்.