விளையாட்டு

யார் இந்த குகேஷ்?

இந்தியாவிலிருந்து இருவர் செஸ் உலக சாம்பியன் ஆகியுள்ளார்கள். இருவரும் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமையே.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், 2006 மே 29 அன்று சென்னையில் பிறந்தவர். அவருடைய தந்தை ரஜினிகாந்த் ஈஎன்டி மருத்துவர். அவருடைய தாய் நுண்ணுயிரியல் வல்லுநர்.

7 வயது முதல் செஸ்ஸில் ஆர்வமாக விளையாடி வருகிறார் குகேஷ். 2018-ல் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். 2019-ல் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் ஆகி உலகின் 2-வது இளவயது கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையை அடைந்தார். தரவரிசையில் 37 வருடங்களாக முன்னணியில் இருந்த இந்திய வீரரான விஸ்வநாதன் ஆனந்தை 2023-ல் தாண்டிச் சென்று இந்தியாவின் நெ.1 செஸ் வீரர் என்கிற நிலையை அடைந்தார்.

கடந்த செப்டம்பரில் இந்திய அணி முதல்முறையாக செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வெல்ல உதவினார் குகேஷ். ஒலிம்பியாடில் இருமுறை தங்கப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.

சமீபத்தில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை 17 வயதில் வென்று சாதனை படைத்த குகேஷ், அப்போட்டியை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டிங் லிரனுக்கு எதிராக விளையாடத் தகுதி பெற்றார். இப்போது அவரைத் தோற்கடித்து உலக சாம்பியன் ஆகியுள்ளார். அதுவும் இளவயது உலக சாம்பியன் என்கிற சாதனையுடன். 1985-ல் கேரி கேஸ்பரோவ் 22 வயதில் உலக சாம்பியன் ஆகி, சாதனை படைத்தார். அச்சாதனையை குகேஷ் முறியடித்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை வென்றுள்ளார். இப்பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் குகேஷ். இந்தியாவிலிருந்து இருவர் செஸ் உலக சாம்பியன் ஆகியுள்ளார்கள். இருவரும் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமையே.