ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் சிஎஸ்கேவின் புதுமுகமாகவும் ரசிகர்களுக்கு அறிமுகமான அன்ஷுல் கம்போஜ் இன்று இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கிரிக்கெட் நிபுணர்களாலும் ரசிகர்களாலும் பார்க்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்காத அன்ஷுல் கம்போஜ் திடீரென மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடுவது மிகப் பெரிய திருப்புமுனை.
கபில் தேவைக் கொடுத்த ஹரியாணாவிலிருந்து வந்துள்ள மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தான் அன்ஷுல் கம்போஜ். கர்னல் அருகில் உள்ள ஃபஸில்பூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கம்போஜ், 2000-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் பிறந்தவர்.
ஆரம்பத்தில் தெருக்களில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தார் கம்போஜ். 12 வயதின்போது அவருடைய உடல் எடை அதிகமானதால் அதைக் குறைப்பதற்காக கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு அனுப்பினார் அவருடைய தந்தை உத்தம் சிங். எதற்கோ அனுப்பினேன், இப்போது இந்திய அணிக்கு விளையாடுவது வரை முன்னேறிவிட்டா என இப்போது தந்தை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள உத்தம் சிங்குக்கு இது வாழ்நாள் சந்தோஷம். இந்திய அணிக்கு அன்ஷுல் கம்போஜ் தேர்வானபோது அவருடைய தாயார், சிறுநீரகக் கல் பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தினரால் மகிழ்ச்சியைப் பெரிதாகக் கொண்டாட முடியாமல் போனது.
முதலில் ஹரியாணா யு-19 அணிக்குத் தேர்வான கம்போஜ், பிறகு இந்திய இளையோர் அணிக்கும் தேர்வானார். 2020-ல் யு-19 உலகக் கோப்பைக்குத் தேர்வான கம்போஜ், காயம் காரணமாக அப்போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. 19 வயதில் உலக் கோப்பை வாய்ப்பைத் தவறவிட்டதில் மிகவும் மனமுடைந்து போனார். கண்ணீர் விட்ட கம்போஜ், இனிமேல் கிரிக்கெட்டே வேண்டாம் என்றும் உணர்ச்சிவப்பட்டுப் பேசியிருக்கிறார். நீ ஒழுங்காப் பந்துவீசு. தொடந்து விளையாடு. எல்லாம் தானாக நடக்கும் என்று மகனைத் தேற்றியிருக்கிறார் உத்தம் சிங் .
எனினும் இந்திய யு-19 அணியில் விளையாடியது கம்போஜுக்குப் பெரிய திறப்பாக அமைந்தது. வாழ்க்கையில் சாதிக்க என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அந்த அணியில் இருந்தபோது கற்றுக்கொண்டேன் என்கிறார் கம்போஜ்.
2022-ல் ரஞ்சி கோப்பையில் அறிமுகமான கம்போஜ், கடந்த வருடம் கேரள அணிக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார். ரஞ்சி போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்திய 3-வது பந்துவீச்சாளர் என்பதால் திடீர் புகழை அடைந்தார். 2023-24 விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியை முதல்முறையாக ஹரியாணா வென்றது. அந்தப் போட்டியில் 10 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார் கம்போஜ். துலீப் கோப்பை, இந்திய இளையோர் அணி எனத் தனக்குக் கிடைத்த முக்கியமான வாய்ப்புகளில் கவனம் பெறும் அளவுக்கு விக்கெட்டுகள் எடுத்தார். துலீப் கோப்பையில் இந்தியா பி அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இத்தனைக்கும் அவர் விளையாடிய இந்தியா சி அணி 525 ரன்கள் எடுத்த ஆடுகளத்தில் தான் அவர் அவ்வளவு அற்புதமாகப் பந்துவீசினார்.
பந்துவீச்சுக்கு உதவாத ஆடுகளங்களில் ஸ்டம்புக்கு நேராகப் பந்துவீசி போல்ட், எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டுகளை வீழ்த்த முயல்வேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக வாய்ப்புகளை உருவாக்குவேன் எனக் கூறுகிறார் கம்போஜ். ஆஸி. ஜாம்பவானின் கிளென் மெக்ராதின் தீவிர ரசிகரான கம்போஜ், அவருடைய பந்துவீச்சுக் காணொளிகளை அடிக்கடிப் பார்த்து உத்திகளைக் கற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அசத்தியதால் 2024 ஐபிஎல் போட்டிக்காக ரூ. 20 லட்சத்துக்கு மும்பை அணி கம்போஜைத் தேர்வு செய்தது. 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். முதல் ஐபிஎல் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்டை போல்ட் செய்தார். அது நோ பாலாக அமைந்தது. பிறகு அவருடைய பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அளித்த கேட்சையும் தவறவிட்டார்.
முதல் ஐபிஎல் அனுபவம் எனக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் உங்கள் திறமை எந்தளவுக்கு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதற்குப் பாடமாக இருந்தது என்கிறார் கம்போஜ்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் ரஞ்சியில் 10 விக்கெட்டுகள் எடுத்த நட்சத்திரமாக மாறியிருந்ததால் கம்போஜைத் தேர்வு செய்ய மும்பையும் சென்னையும் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில், அடிப்படை விலை ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 3.40 கோடிக்கு சிஎஸ்கே அணிக்குத் தேர்வானார்.
ஐபிஎல் 2025 போட்டி சிஎஸ்கேவுக்கு மோசமாக அமைந்தாலும் அன்ஷுல் கம்போஜின் வரவு புதிய நம்பிக்கையை அளித்தது. 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை எடுத்தார். கம்போஜ் பந்துவீசிய விதம் தோனியைக் கவர்ந்து அவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசவும் செய்தார். துரதிர்ஷ்டவசமாக கம்போஜ் விளையாடிய இரு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் இடம்பெற்ற அணிகள் கடைசி இடத்தையே பிடித்தன.
சமீபத்தில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்தில் லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கம்போஜ் - முகேஷ் குமார், ஹர்ஷித் ராணாவை விடவும் நன்றாகப் பந்துவீசி இரு ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் ஒரு அரை சதமும் எடுத்தார். எனினும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் இங்கிலாந்திலிருந்து டியூக்ஸ் பந்துகளை எடுத்துச் சென்று தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். எதையும் எதிர்பார்க்காமல் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் திடீர் அழைப்பு வந்து இப்போது ஒரு டெஸ்டில் விளையாடியும் விட்டார்.
30 - 40 டெஸ்டுகளில் விளையாடியுள்ள பந்துவீச்சாளர்களே கேப்டனின் திட்டங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அன்ஷுல் கம்போஜ் திட்டங்களை அழகாகப் புரிந்துகொள்வதோடு நன்றாகவும் செயல்படுத்துவார் என அன்ஷுல் கம்போஜைப் பாராட்டித் தள்ளுகிறார் முன்னாள் வீரர் அஸ்வின்.
24 முதல்தர ஆட்டங்களில் 79 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் கம்போஜ். சர்வதேச கிரிக்கெட்டிலும் முத்திரை பதிப்பார் என்கிற எதிர்பார்ப்பை அவர் நிச்சயம் பூர்த்தி செய்யவேண்டும்.